Tuesday, June 19, 2012

ABDUL KALAM - A SAINT OR A SCIENTIST

அப்துல் கலாம்

விஞ்ஞானி ஆன ஒரு ஞானி


அப்துல் கலாம் -  இந்த மனிதரை பற்றிய எனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல முறை நான் விரும்பியதுண்டு.சில நண்பர்களுக்கு என் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்பது எனக்கு தெரியும்.இந்த மாமனிதர் என்னை கவர்ந்து விட்டவர் என்ற காரணம் ஒன்றே இவரை பற்றி நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஒரு மனிதனை பற்றி எழுதுவது என்றால் அவனால் இந்த மனித சமுதாயம் பயன் பெற்று இருக்க வேண்டும், அல்லது தான் வாழும் காலத்தில் மக்களுக்கு நல்ல பயனுள்ள கருத்துக்களை - மக்களின் வாழ்க்கை தரும் உயர்வு பெரும் நல்ல செயல்களை அவன் செய்திருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரின் நாயகனாக, ஒரு 'ரோல் மாடலாக' இந்த முதிய இளைனர் விளங்குகிறார் என்பதே அவர் செய்து வரும் நற் செயல்களுக்கு ஒரு நற் சான்று.

ஒரு எளிய முஸ்லிம் தமிழ் குடும்பத்தில் பிறந்து ஒரு நாடறிந்த விஞ்ஞானியாக தன்னை உயர்த்திக்கொண்ட வரலாறு பற்றி நான் இங்கு விவரிக்க போவதில்லை. தன்னிகரற்ற அறிவியல் சாதனைகளால் 'பாரத ரத்னா' என்ற உயர் தேசிய விருதினை பெற்றது கூட கலாமை பொறுத்த வரையில் ஒரு பெரும் சாதனையில்லை. விண் விளி சாதனைகள் நிகழ்த்தி
"அக்னி நாயகனாக" அவர் உலா வந்தது கூட அவரை பொறுத்த வரை ஒரு சாதாரண நிகழ்ச்சியே ஆகும்.

அசாதாரமான  சாதனைகளை உலகின் முன் நிகழ்த்தி காட்டிய இந்த அசாதாரமான மனிதன்  தன்னை எப்போதுமே ஒரு  சாதரணமான  மனிதனாகவே  காட்டி கொண்ட  விதம்  என்னை  பல முறை வியக்க வைத்ததுண்டு. சிறிய  வெற்றிகளுக்கு  எல்லாம்  விழா  எடுத்து  மகிழும்  இக்கால  சூழலில்  அபாரமான  அறிவியல்  சாதனைகளை  நிகழ்த்தி  காட்டிய  இந்த  "வெற்றியின் சிகரம்" எப்போதுமே  தன்னை  வெளி உலகுக்கு  அறிமுகம்  செய்து  கொள்ள  ஒரு போதும்  விரும்பியதில்லை.

பதவிகளை  தேடி  அலையும்  இவ்வுலகில்  இந்தியாவின்  உயர் பதவி  இவரை  வலிய  தேடி வந்து  அணைக்க  இருந்த போது, அதன்   செயலை எண்ணி  கலாம்  மிகவும்  நாணம்  அடைந்தார். அன்றைய  பாரத  பிரதமர்  அவர்களே  இவரை  தேடி  வந்து  "ஜனாதிபதி  பதவி" யை  ஏற்று கொள்ளும்படி  வற்புறுத்திய  போது  இவர்  அதை  ஏற்க  மிகவும்  தயங்கினார்.  அழகிய  பெண்களை  கூட ஏறெடுத்து  பார்க்க  தயங்கும்  கலாம்  அவர்களை  'பதவி  தேவதை' தன்  பொன் கரங்களால்  ஆரத்தழுவி  தன்னுடமையாக்கிக் கொண்டாள். ஜனாதிபதி  பதவி  இவரால்  தரம் உயர்ந்தது. பதவி  சுகத்தை  நாடாத  கலாமை கண்டு  பதவி  தேவதை  மட்டுமல்ல - இந்த  நாடே வியந்தது. அரண்மனையின்  நீண்ட  கதவுகள்  சாதாரண  மக்களுக்காக  திறந்து  விடப்பட்டன. ஜனாதிபதி  மாளிகை  சாதாரண  மனிதர்களும்  உலா  வரும்  எழிலகம்  ஆக  உரு மாறிற்று. மக்கள் நாயகனே  மக்களில்  ஒருவனாக  காட்சி  அளித்தது  கண்டு  நாடே வியந்தது. யார் வேண்டுமானாலும், எப்போது  வேண்டுமானாலும்  ஜனாதிபதியை  சந்திக்க  முடியும்  என்ற  கலாமின்  அறிவிப்பு  அற்ப பதவிகளில்  இருப்போரையும்  அதிர வைத்தது. பதவி  சுக வாசிகள்  இந்த அறிவிப்பினால்  மிரண்டு போனார்கள். "மக்கள் எவ்வழி, மன்னன்  அவ்வழி" என்ற பொன் மொழிக்கு  இணங்க, ஜனாதிபதியே  மக்களை  நோக்கி  நடந்த காட்சி  இந்திய  வரலாற்றில்  முதல்  முதலாக  அரங்கேறியது. நேற்று பெய்த மழையில்  இன்று  வளர்ந்த  காளான்  தலைவர்கள்  எல்லாம்  கலாமை  பார்த்து  பயந்தார்கள். எங்கே, மக்களும்  தங்களை  கலாம்  போல்  இருக்க  சொல்வார்களோ - ஒரு வேளை  அப்படி  சொன்னால் என்ன  செய்வது  என்று  மூளையை  பிசைந்தார்கள். அப்துல் கலாம் - இந்திய  திரு நாட்டிற்கு  கிடைத்த  ஓர்  அற்புத தலைவர்.

கலாம் மிகவும் எளிமையாக இருப்பதற்கு காரணம் என்ன? அவர் "ஜனாதிபதி" போல் வேஷம் கூட போடவில்லை. சாதாரண  கலாமாகவே  தன்னை  எண்ணிக்கொண்டார். ஏன் - ஒரு விஞ்ஞானி  என்று கூட தன்னை பெருமைப்பட அவர்  கூறி கொண்டதில்லை. பதவிகளின்  பெயரால் என்றுமே அவர் தன்னை அடையாளம் காண  முயன்றதில்லை.அவரின்  எளிமை கோலத்தை கூட கிண்டல் செய்து  மகிழ்ந்தவர்கள் பலர். அவரின் நடை உடை பாவனைகளை கேலி சித்திரமாக்கி பிரசுரித்து மகிழ்ந்தவர் சிலர். தன்னை அறிந்து கொண்டவர்கள் பிறரின் விமர்சனம் கண்டு மனம் கலங்குவதில்லை. கலாம் 21-ம் நூற்றாண்டின் "சாக்ரடீஸ்" ஆக வலம் வந்தார். இளைனர்களை தட்டி எழுப்பினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்கள்,மாணவர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவரின் கருத்துரைகளை ஆவல் பெருக கேட்டு மகிழ்ந்தனர். கோடிக்கணக்கான இளைனர்களின் மாடல் தலைவனாக அவர் உயர்ந்தார். இளைனர்களுக்கு சிந்திக்கவும் ஆக்க பூர்வமான கனவுகளை வளர்த்து அதை செயல் படுத்தும் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். முன்னாள்  ஜனாதிபதி என்ற போலி அந்தஸ்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாமல் கலாமாகவே மக்கள் மத்தியில் வலம் வந்தார். நம் நாட்டு கல்லூரி,பல்கலைகழகம் என்றில்லாமல் வெளி நாட்டு கல்லூரிகளும்,பல்கலைகழகங்களும் இவரை போட்டி போட்டு அழைத்து கெளரவித்தன. இவர் வாங்கி குவித்த "டாக்டர்" பட்டங்களுக்கு அளவே இல்லை. கலாம் என்றால் கர்வம் இல்லாதவர் என்பது மக்களின் ஒரு மித்த கருத்தாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் கலாம் பற்றி பல்வேறு கருத்து பேதங்கள் உண்டு. அது பற்றி விளக்க முற்படுவது என் நோக்கமல்ல. பி.ஜெ.பி.தேர்வு செய்வதால் மட்டுமே இவர் முஸ்லிம்களுக்கு எதிரி ஆகி விட முடியாது. இது சுயநலம் கொண்ட சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த பெரும் பொய் கூற்றாகும். இந்திய அரசியலில் கலாம் போன்ற நேர்மையான முஸ்லிம்கள் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த "சந்துமுனை சிந்துபாடிகள்" முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரில் இல்லாத-பொல்லாத அவதூறுகளையெல்லாம்  முனைந்து நின்று பரப்ப துணிவது கண்டிக்கத் தக்கது. கலாம் இந்த அவதூறுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த மனிதர்; மனிதப் புனிதர்.இளகிய மனமும்,ஏழைக்கு இறங்கும் மனப்பாங்கும் கொண்ட ஓர் ஏழை பங்காளர். தன் பெயருக்கு தகுந்தாற்போல் 'திருமறையை' நன்கு கற்றுணர்ந்து அதை வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சிறந்த முஸ்லிம் அவர். விஞ்ஞானியாக இருந்தும் ஞானி போல் வாழ்பவர்.

இந்திய திருநாடு இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான நல்ல தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருக்கும் ஒரு சில தலைவர்களும் நேர்மையானவர்கள் என்று சான்று பகரும் நிலையில் இல்லை. சினிமாக் காரர்களின் கைகளில் அரசியலும் நாடும் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரசியல் தலைவர்கள் எல்லாம் சினிமா நடிகர்களாக அல்லது திரை  கதை-வசன கர்த்தாக்களாக இருப்பவர்களே உள்ளனர். அரசியல் தலைவர்கள்  எல்லோரும் நம் தமிழ் நாட்டில் சினிமா உலகில் இருந்தே வருகிறார்கள். பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சினிமா கலைனர்களே. தமிழ் நாட்டை சேர்ந்த  கலாம் ஒரு சினிமா கலைனர் அல்ல. நேர்மையான  முதிர்ந்த  'நேஷனல்  லீடர்'. அவரே மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க வேண்டும்  என்று பொறுப்புள்ள  அரசியல் கட்சி பிரமுகர்கள்  அனைவரும் வேண்டுகோள் விடுத்தும், பதவி வலிய வந்து  மீண்டும் வீட்டு  கதவை பலமுறை  தட்டியும், ஆசைக்கு பணியாமல் சொந்த மன சாட்சிக்கு பயந்து, பதவியை தூக்கி எறிந்த கலாம் என் கண் முன் உயர்ந்து நிற்கிறார். 
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் 


5 comments:

  1. மிக அருமையான பதிவு ...

    ReplyDelete
  2. நிஜமான பதிவு.

    ReplyDelete
  3. கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் சகோதரர்
    "ஹஜ்" நிர்வகிக்க இங்கு மக்கா வந்த போது,தன் சகோதரர்
    என்ற முறையில் அவருக்கு எந்த சலுகையும் அளிக்க கூடாது என்றும்,மற்ற ஹாஜிகள் போன்றே கவனித்தால்
    போதுமானது என்று கலாம் கேட்டு கொண்டது ,கலைஞரிடம் இருந்து அவரை மிகவும் வேறுபடுத்தி காண்பிக்கிறது...

    ReplyDelete
  4. நல்ல மனிதரை பற்றிய நல்ல கருத்துகள்...தம்பி ஐயப்பன் ...saifullah வின் நண்பன்

    ReplyDelete
  5. What you have said is absolutely correct, but ...................

    M. Mohamed Ali,
    Karaikal.

    ReplyDelete