Sunday, October 30, 2011

சூபிசம் பற்றி டாக்டர்.அபிபுல்லா




'ஹெல்த்' தமிழ் இதழில் "சூபிசமும் மருத்துவமும்" என்ற தலைப்பில் ஆசிரியர் ஜீன்ஸ் அவர்களுடன் நடத்திய ஒரு அறிவு பூர்வமான கலந்துரையாடல், நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த இனைய தளம் வாயிலாக மீண்டும் பிரசுரம் ஆகிறது.

sufism and mind


Saturday, October 29, 2011

சூபிசம் தொடர்ச்சி - 1



சூபிசம் பற்றி டாக்டர்.அபிபுல்லா அவர்கள்
எழுதிய இந்த அரிய கட்டுரை
மிகுந்த வரவேற்பை பெற்றது.
பிரபல ஹெல்த் இதழில்
ஆசிரியர் 'ஜீன்ஸ்' உடன்
நிகழ்த்திய கலந்துரையாடல்
இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

சூபிசம் தொடர்ச்சி - 2


சூபிசம் தொடர்ச்சி - 3



ஹெல்த்  இதழில் வெளிவந்த இந்த கலந்துரையாடலில்
சூபிகளின் தியான முறைகளையும்
பகா மற்றும் பானா என்றால் என்ன 
என்பது பற்றியும் மிக தெளிவாக விளக்கம் அளிக்கிறார் 
டாக்டர்.அபிபுல்லா அவர்கள்.
தனித்தன்மை மற்றும் பெர்சொனாலிட்டி
பற்றி அவர் அளிக்கும் விளக்கம் சுவையானது. 
 

Friday, October 7, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்



உலக நாயகன் ஜாப்ஸ்

அமெரிக்கா செல்லும்போதெல்லாம் இந்த விந்தை மனிதரை சந்திக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பியதுண்டு.சமீபத்தில் கூட நான் அமெரிக்கா சென்றிந்தபோது ஆப்பிள் நிறுவன ஷோ ரூமுக்கு சென்றிந்தேன். எனது மருமகன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிபுணர்.எனது கம்ப்யூட்டர் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவர் ஒரு லேட்டஸ்ட் ஐபாடு(ipad) ஒன்றை வாங்கி எனக்கு பரிசளித்தார். நவீன தொழில் நுட்பத்தை ஒரு சிறிய பேடுக்குள் இவ்வளவு நேர்த்தியாக செய்ய இயலும் என்பது ஓன்று தான் ஜாப்ஸை ஒரு மேதையாக (genius) உலகத்தின் பார்வையில் கொண்டு வந்து நிறுத்த உதவியது. MAC என்றும், IPOD என்றும், IPHONE என்றும், IPAD என்றும் அவர் நிகழ்த்திய அறிவியல் சாதனைகள் கம்ப்யூட்டர் உலகை அதிசயிக்க வைத்தது மட்டுமல்ல, ஸ்தம்பிக்கவும் வைத்தது. சிறு குழந்தைகள் கூட இந்த உபகரணங்களை மிகவும் எளிதில் இயக்க முடியும் என்பதே ஆப்பிள் நிறுவனத்தின் அபார வெற்றிக்கு மூல காரணம்.

இந்த வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் ஜாப்ஸை கம்ப்யூட்டர் உலகின் தந்தை என்றே நான் கருதினேன். பில் கேட்ஸ் போல் பெரிய குடும்ப பின்னணி இல்லை இவருக்கு. மிகவும் எளிய குடும்ப சூழலில் பிறந்தவர். திருமண உறவு இல்லாமலே ஒரு தாய்க்கு மகனாக பிறந்தவர். தந்தை சிரியா நாட்டை சேர்ந்த அப்துல் பாத்தா என்ற ஒரு முஸ்லிம். திருமண உறவு இல்லாமலே பிறந்த குழந்தையை தாய் வேறு ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டாள். அதுவும் ஒரு எளிய, ஏழ்மையான குடும்பம். ஒரு அனாதையாகவே அவர் நடத்த பட்டார். அவர் விரும்பிய கல்வி அறிவை கூட அவரை தத்து எடுத்தவர்களால் அளிக்க இயலவில்லை. இளமையில் அவரால் நல்ல கல்வி நிறுவனங்களில் பயில இயலவில்லை. உணவுக்கே மிகவும் போராடும் சூழல் ஏற்பட்டது. பல நாட்கள் அவர் பசியால் வாடி இருக்கிறார். பட்டினி நோன்பு இருப்பதை ஒரு சடங்காகவே அவர் கை கொள்ள விரும்பினார். மன அமைதி தேடி இந்தியாவுக்கு கூட அவர் வந்திருக்கிறார். பல ஆசிரமங்களில் தங்கி தியானங்கள் கூட பயின்று இருக்கிறார். ஒரு கால கட்டத்தில் ஒரு ஹிப்பி போலவே தன் வாழ்க்கை முறைகளை மாற்றி கொண்டார். அமெரிக்காவில் வாழ்ந்த பொது ஒரு வேளை உணவுக்காக ஏழு மயல்கல் கூட நடந்து சென்றது உண்டு.

உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் என்றும் நிலை தாழ்ந்து இருந்ததில்லை. அவர்கள் தங்கள் நிலைகளை தாங்களே வடிவமைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். சிறிய கார் செட்டில் துவக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் ஜாப்ஸின் அயராத உழைப்பினால் வானோங்கி வளர்ந்தது. 23 வயதில் ஒரு மில்லியன் டாலருக்கு அதிபதியான ஜாப்ஸ் 24 வயதில் பத்து மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனதும், 25 வயதில் நூறு மில்லியன் டாலர் நிலைக்கு வளர்ந்ததும் அமெரிக்கன் கார்பொரேட் தொழில் அரங்கில் ஜாப்ஸ் நிகழ்த்திய ஒரு வரலாற்று சாதனை. ஒரு தனி மனதனின் அறிவு திறனுக்கு இத்துணை ஆற்றலா ! மலைக்க வைக்கிறது ஜாப்ஸ் நடத்திய அறிவியல் சாதனைகள். கம்ப்யூட்டர் துறையில் தலை நிமிர்ந்து நின்ற பெரும் நிறுவனங்கள் எல்லாம் ஜாப்ஸ் என்ற தனி மனிதனின் முன் கைகட்டி நின்றன. IBM, DISNEY, MICROSOFT நிறுவனங்கள் அனைத்துமே ஜாப்ஸின் தனி திறனை அல்லது மேதை தன்மையை கண்டு வியந்தன அல்லது பயந்தன என்று கூறலாம்.

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற தொழில் வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் மேதைகள் ஜாப்ஸ் உடன் இணைந்து பணியாற்றியது ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணம். சாதாரண ரிசப்சன் வேலைக்கு கூட பி.ஹெச்.டி. படித்தவர்களை ஜாப்ஸ் நியமனம் செய்தார் என்பது ஆச்சரியம் கலந்த ஒரு உண்மை. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சிறந்த CEO தேவை பட்ட காலகட்டம் அது. பெப்சி கோலா நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பர் ஜானை அந்த வேலைக்கு வர பணித்தார் ஜாப்ஸ். பெரிய நிறுவனத்தின் சிறந்த பணியினை விட்டு விடுவதற்கு தயங்கினார் நண்பர் ஜான். ஜானிடம், ஜாப்ஸ் பேசிய அந்த வார்த்தைகள் ஜானை மட்டுமல்ல, பெரும் பணம் பண்ணும் பல பிரபல நிறுவனங்களின் தலை சிறந்த CEO களை அதிர வைத்தது. ஜாப்ஸ் தனது நண்பர் ஜானிடம் கேட்ட அந்த கேள்வி மிகவும் அலாதியானது. சிந்திக்க வைப்பதும் கூட. ஜாப்ஸ் கேட்டார்-

"ஜான் அவர்களே இன்னும் எத்தனை காலம் தான் சீனி கலந்த தண்ணீரை கலந்து விற்பனை செய்து கொண்டு இருப்பீர்கள்! என்னுடன் இணைந்து இந்த உலகை மாற்றும் முயற்சிக்கு உங்களை அழைக்கிறேன்" ஜாப்ஸின் தத்துவ பூர்வமான, இயற்கையான, யதார்த்தமான, ஆக்கபூர்வமான இந்த சிந்தனை ஜானின் அன்றைய தூக்கத்தை கலைத்தது. காலையில் படுக்கையை விட்டு எழுந்த அவர் ஒரு ஆக்க பூர்வமான முடிவை மேற்கொண்டார். பெப்சி கோலா கம்பெனியின் பதவியை துறந்த அவர் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

வாழ்கையில் துன்பங்களையே அனுபவித்து மகிழ்ந்தவர் ஜாப்ஸ். நீண்ட காலம் தன்னை பெற்று கைவிட்ட பெற்றோரை தேடி அலைந்தார். முடிவில் தன்னை பெற்ற தாய் உயிரோடு இருப்பதை கண்டறிந்தார். திருமணம் ஆகாமல் தன்னை பெற்று எடுத்த தாய் தந்தையர் பின்னாளில் முறைப்படி திருமணம் செய்து கொண்டதையும், தனக்கு ஒரு சகோதரி உண்டு என்பதையும் தாயிடம் இருந்து தெரிந்து கொண்டார். தனது காதலி மூலம் பிறந்த பெண் குழந்தையை கூட ஏற்று கொள்ள சிறிது காலம் தயங்கினார். பிறகு வேறு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டார். அவள் மூலம் மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். என்றாலும் அவரது குடும்ப வாழ்க்கை அவ்வளவு மகிழ்சிகரமாக இல்லை.

உடல் நிலையும் அவருக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. கேன்சர் நோயால் அவர் அவதி பட்டார். அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். லிவர் மாற்று ஆபரேஷன் கூட செய்து கொண்டார். என்றாலும் நீண்டநாள் தன்னால் வாழ இயலாது என்பதை தீர்கமாக உணர்ந்து கொண்டார். தனது முடிவை எதிர்பார்த்து காத்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கம்ப்யூட்டர் உலகின் 'தீர்க்க தரிசி' நேற்று நம்மை விட்டு மறைந்து விட்டார். தாமஸ் ஆல்வா எடிசனை போல்,ஆல்பர்ட் யொன்ஸ்டைன் போல் அறிவியல் உலகின் ஒரு மேதை உலகை விட்டு பிரிந்துவிட்டார். ஜாப்ஸ் போல் ஒருவர் தோன்ற மீண்டும் பல காலம் ஆகலாம்.அவர் விட்டு சென்ற ஆப்பிள் நிறுவனம் அவரில்லாமல் மீண்டும் புதுமைகள் படைக்குமா என்பதே இப்போதைய தொழில் வல்லுனர்களின் ஒரே கேள்வி. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஜாப்ஸ் தயாரித்த பல உபகரணங்களை பயன்படுத்தியவன் என்ற முறையில் அவரின் ரசிகராக இருந்து அவரின் செயல்பாட்டை வியக்கிறேன். என் வாழ்வில் நான் வியக்கும் ஒரு அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் அது மிகைஅல்ல.

Monday, September 26, 2011

சில மனிதர்களும் சில நினைவுகளும்




எளிமையின் சிகரம்
பி.எஸ்.எ.ரஹ்மான்




கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஜலால் மருத்துவமனை. இந்த மருத்துவ மனையின் நிறுவனர் எனது மாமனார் எஸ்.எ.இப்ராஹீம் அவர்கள். கிட்ட தட்ட இருநூறு படுக்கை வசதி கொண்ட மிகவும் பிரபலமான மருத்துவமனை இது. சில உயரிய  காரணங்களால் இந்த மருத்துவமனையை முஸ்லிம் சமுதாய நலனை மனதில் கொண்டு ஒரு கலை கல்லூரியாக மாற்றி அமைக்க அவர் எண்ணினார்.. உடனடியாகவே அதற்கான முயற்சிகளிலும் துணிந்து இறங்கினார். முஸ்லிம் கலை கல்லூரி என்ற பெயரில் அது செயல் பட துவங்கியது. அக்கல்லூரியின் நிர்வாகியாகவும் , தாளாளராகவும் அவர் செயல் பட்ட காலம் அது. எண்பத்திநாலு அல்லது எண்பத்தி ஐந்து ஆண்டு துவக்கத்தில் என்று எண்ணுகிறேன். அந்த நேரம் ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றை தக்கலை பகுதியில் நான் நடத்தி வந்தேன்.குழந்தைகள் நல  மருத்துவநிபுணராக  நான்   அங்கு பணியாற்றி கொண்டிருந்தேன். மிகவும் பிசியாக நான் இருந்த காலகட்டம் அது. முதலமைச்சர் சத்துணவு உயர் மட்ட குழு உறுப்பினர், மாநில ஹஜ்ஜ் குழு உறுப்பினர், வக்ப் வாரிய விசாரணைக்குழு உறுப்பினர்,, ஜனாதிபதி தேசிய விருது தேர்வு குழு உறுப்பினர், இந்திய மருத்துவ சங்க செயலாளர் என்று அடுக்கடுக்கான பல பதவிகளை நான் சுமந்து கொண்டிருந்த நேரம் அது.






இன்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஒரு நாள் மருத்துவ மனையில் நான் மிகவும் பிசியாக இருந்த நேரம் எனது மாமா அவர்கள் என்னை தேடி வந்தார்கள். அவரது நெருங்கிய நண்பர் ர் பி.எஸ்.எ.ரஹ்மான் அவர்கள் நாகர்கோயில் வர இருப்பதாகவும்  அவருக்காக ஒரு நிகழ்ச்சியை அவரது கல்லூரியில் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்றும் என்னை பணித்தார்கள். நான் வருவதாக ஒப்பு கொண்டேன்.அடுத்த நாள் நிகழ்ச்சி அரங்கிற்கு குறித்த நேரத்தில் சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு முன்பாகவே பி.எஸ்.எ. அவர்கள்,  அவர்கள்  நண்பர்களுடன் அங்கே வந்து  அமைதியாக காத்து இருந்தார்கள். அவர்களுடன் அன்றய வக்ப் வாரிய தலைவர் ஜனாப். ரஸ்ஸாக் அவர்கள், மெஜெஸ்டிக் மோட்டார்ஸ் நிர்வாகி ஜனாப்.கரீம் சாஹிப் மற்றும் சிலரும் வந்து இருந்தனர். எனக்கு அப்போது பி.எஸ்.எ. அவர்களை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஒரு தொழில் அதிபர் என்று மட்டும் அறிந்து வைத்திருந்தேன். எனவே எனது மாமாவின் சிறந்த நண்பர் என்ற முறையில் அவரை பற்றி ஒரு சிறு அறிமுக உரையை நிகழ்த்தினேன். அன்றய நிகழ்ச்சியில் அவர்கள் இரண்டு லட்சம் ரூபாயை கல்லூரிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்கள். கூட்டம் முடிந்த பின்னர் பி.எஸ்.எ. அவர்கள் திருவிதாங்கோட்டில் உள்ள எனது மாமனார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி இருந்தார்கள். அவரை பார்க்க வந்திருந்த ஊர் பிரமுகர்களுடன் சரிசமமாக அமர்ந்து அவர்  உரையாடிக்கொண்டு இருந்தது என்னை மிகவும் அதிசயக்க வைத்தது.






சாப்பாடு வைபவங்கள் முடிந்த பின்னர்   சிறிது நேரம் அவர்களுடன் இருந்து பேசிவிட்டு விடைபெற எண்ணிய நான் அவர்கள் அருகில் சென்று  O.KAY- நான் போய் வருகிறேன்.''we will meet' என்று ஆங்கிலத்தில் சொல்லி விடை பெற முயன்றேன் அப்போது அவர்கள் உதிர்த்த நகைச்சுவை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அவர்கள் சொன்னார்கள் ''already enough meat in the plate'. வார்த்தை விளையாட்டில் வித்தகர் அவர் என்பதை நான் எளிதில் புரிந்து கொண்டேன். எனது மாமா வீட்டில்  தொழுகை அறையில் அவர் இருந்த முறை என்னை மேலும் சிலிர்க்க வைத்தது. சாதாரண லுங்கியில், கை வைத்த ஒரு பனியனை அணிந்து கொண்டு சாதாரண மனிதர்களுடன் சரி சமமாக அமர்ந்து சிரித்து கலகலப்பாக பேசிய, பழகிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மகா மனிதர் இவர் என்பதை அவர் செயல் பாடுகள் எனக்கு தெளிவாக உணர்த்தின. காட்சிக்கு எளியவராக இருந்த அந்த பெரியவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை எவராலும் யூகிக்க இயலாத அளவுக்கு அவரது வெளி தோற்றம் அமைந்து இருந்தது. இரவு அங்கேயே படுத்து உறங்கிவிட்டு அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். அதிகாலையில் தக்கலையில் என் வீட்டு முன்பு ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதில் வந்து இறங்கியவர் எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பெரிய போலிஸ் அதிகாரி. என்ன சார், அதிகாலையில் வந்து இருக்கிறீர்கள் - என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் சொன்னார். பி.எஸ்.எ. ஒரு பொருளை உங்கள் வீட்டில் தவற விட்டு போய் விட்டார். அதை எடுத்து கொண்டுபோய் அவரிடம் கொடுக்க வேண்டும் - அதற்காகவே மெனக்கெட்டு நானே வந்தேன் என்று அவர் கூற எனக்கு அவர் மீது சற்று கோபம் ஏற்பட்டாலும் , அந்த பெரியவர் மீது அந்த அதிகாரி வைத்திருந்த அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் என்னை மிகவும் வியக்க வைத்தது.எம்.ஜி.ஆர்.அவர்களும், கலைனர் அவர்களும் கூட பி.எஸ்.எ. .அவர்களிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள் என்று அந்த போலிஸ் அதிகாரி மேலும் சொல்ல நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன்.




இந்த சிறப்புக்கு உரிய மனிதரை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று நான் மனமார விரும்பினேன். அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் எனக்கு கிடைத்தது. நாகர்கோயிலில் 'ஐக்கிய பொருளாதார பேரவை' யின் கிளை ஒன்றை துவக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான நிகழ்ச்சி ஒன்றிற்கு நாகர்கோயில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் நாங்கள் சில பேர் சேர்ந்து ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். டாக்டர்.அப்துல் காதர், அகமத்கான்,இஸ்மாயில்,ஹமீது உட்பட மொத்தம் பத்தொன்பது பேர் உறுப்பினர்களாக இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினோம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பி.எஸ்.எ. அவர்கள் நாகர்கோயில் வந்தார்கள். முஸ்லிம் மக்களின் சமூக,பொருளாதார,கல்வி மேம்பாட்டுக்காக அவர்கள் செதுக்கிய அருமையான திட்டம் இது. ரோட்டரி கிளப் போல், லயன்ஸ் கிளப் போல் இதை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் மிகவும் ஆசை பட்டார்கள். சில சுயநல கும்பலின் மேலாதிகத்தால் அவர்களின் கனவு முழுமையாக நிறைவேறவில்லை.




பிறகு சென்னையில் பல திருமண விழாக்களில் அவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்றாலும் ஒரு முக்கிய சம்பவம் இன்னும் என் மனதில் நிழலாடிகொண்டிருகின்ற்றது. என்னுடைய நெருங்கிய நண்பரும், மூத்த ஐ.எ.எஸ். அதிகாரியுமான திரு.ஈ.அஹமத் அவர்கள் திடீர் என்று சென்னையில் வைத்து காலமாகி விட்டார்கள். காலையில் அவர்களின் வீட்டிற்கு நான் என் நண்பர் முனீர் ஹோடா வுடன் சென்று இருந்தேன். ஆற்காடு நவாப் முகம்மது அலி உட்பட பெரும்திரளான வி.ஐ.பி.பிரமுகர்கள் அங்கே கூடியிருந்தனர். அங்கே நான் கண்ட அதிசயம் என்ன வென்றால் பி.எஸ்.எ. அவர்கள் அந்த வீட்டின் ஒரு மூலையில் சாதாரணமாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை அஹமத் அவர்களின் பிள்ளைகளுக்கு கூட அடையாளம் தெரியவில்லை. தகவல் தெரிந்த உடனேயே, வெளிநாட்டில் இருந்த அவர்கள் தனது எல்லா அலுவல்களையும் புறம் தள்ளிவிட்டு தனது நண்பரின் மரணத்தில் பங்கு கொள்ள சென்னை வந்தது அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. எளிமையும், கம்பீரமும் இணைந்த இந்த பெருமகனை எண்ணும்போது நெஞ்சம் இனிக்கிறது. சுகமான நினைவுகள் மனதுக்கு இதமளிக்கின்றன.