Friday, October 7, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்



உலக நாயகன் ஜாப்ஸ்

அமெரிக்கா செல்லும்போதெல்லாம் இந்த விந்தை மனிதரை சந்திக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பியதுண்டு.சமீபத்தில் கூட நான் அமெரிக்கா சென்றிந்தபோது ஆப்பிள் நிறுவன ஷோ ரூமுக்கு சென்றிந்தேன். எனது மருமகன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிபுணர்.எனது கம்ப்யூட்டர் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவர் ஒரு லேட்டஸ்ட் ஐபாடு(ipad) ஒன்றை வாங்கி எனக்கு பரிசளித்தார். நவீன தொழில் நுட்பத்தை ஒரு சிறிய பேடுக்குள் இவ்வளவு நேர்த்தியாக செய்ய இயலும் என்பது ஓன்று தான் ஜாப்ஸை ஒரு மேதையாக (genius) உலகத்தின் பார்வையில் கொண்டு வந்து நிறுத்த உதவியது. MAC என்றும், IPOD என்றும், IPHONE என்றும், IPAD என்றும் அவர் நிகழ்த்திய அறிவியல் சாதனைகள் கம்ப்யூட்டர் உலகை அதிசயிக்க வைத்தது மட்டுமல்ல, ஸ்தம்பிக்கவும் வைத்தது. சிறு குழந்தைகள் கூட இந்த உபகரணங்களை மிகவும் எளிதில் இயக்க முடியும் என்பதே ஆப்பிள் நிறுவனத்தின் அபார வெற்றிக்கு மூல காரணம்.

இந்த வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் ஜாப்ஸை கம்ப்யூட்டர் உலகின் தந்தை என்றே நான் கருதினேன். பில் கேட்ஸ் போல் பெரிய குடும்ப பின்னணி இல்லை இவருக்கு. மிகவும் எளிய குடும்ப சூழலில் பிறந்தவர். திருமண உறவு இல்லாமலே ஒரு தாய்க்கு மகனாக பிறந்தவர். தந்தை சிரியா நாட்டை சேர்ந்த அப்துல் பாத்தா என்ற ஒரு முஸ்லிம். திருமண உறவு இல்லாமலே பிறந்த குழந்தையை தாய் வேறு ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டாள். அதுவும் ஒரு எளிய, ஏழ்மையான குடும்பம். ஒரு அனாதையாகவே அவர் நடத்த பட்டார். அவர் விரும்பிய கல்வி அறிவை கூட அவரை தத்து எடுத்தவர்களால் அளிக்க இயலவில்லை. இளமையில் அவரால் நல்ல கல்வி நிறுவனங்களில் பயில இயலவில்லை. உணவுக்கே மிகவும் போராடும் சூழல் ஏற்பட்டது. பல நாட்கள் அவர் பசியால் வாடி இருக்கிறார். பட்டினி நோன்பு இருப்பதை ஒரு சடங்காகவே அவர் கை கொள்ள விரும்பினார். மன அமைதி தேடி இந்தியாவுக்கு கூட அவர் வந்திருக்கிறார். பல ஆசிரமங்களில் தங்கி தியானங்கள் கூட பயின்று இருக்கிறார். ஒரு கால கட்டத்தில் ஒரு ஹிப்பி போலவே தன் வாழ்க்கை முறைகளை மாற்றி கொண்டார். அமெரிக்காவில் வாழ்ந்த பொது ஒரு வேளை உணவுக்காக ஏழு மயல்கல் கூட நடந்து சென்றது உண்டு.

உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் என்றும் நிலை தாழ்ந்து இருந்ததில்லை. அவர்கள் தங்கள் நிலைகளை தாங்களே வடிவமைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். சிறிய கார் செட்டில் துவக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் ஜாப்ஸின் அயராத உழைப்பினால் வானோங்கி வளர்ந்தது. 23 வயதில் ஒரு மில்லியன் டாலருக்கு அதிபதியான ஜாப்ஸ் 24 வயதில் பத்து மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனதும், 25 வயதில் நூறு மில்லியன் டாலர் நிலைக்கு வளர்ந்ததும் அமெரிக்கன் கார்பொரேட் தொழில் அரங்கில் ஜாப்ஸ் நிகழ்த்திய ஒரு வரலாற்று சாதனை. ஒரு தனி மனதனின் அறிவு திறனுக்கு இத்துணை ஆற்றலா ! மலைக்க வைக்கிறது ஜாப்ஸ் நடத்திய அறிவியல் சாதனைகள். கம்ப்யூட்டர் துறையில் தலை நிமிர்ந்து நின்ற பெரும் நிறுவனங்கள் எல்லாம் ஜாப்ஸ் என்ற தனி மனிதனின் முன் கைகட்டி நின்றன. IBM, DISNEY, MICROSOFT நிறுவனங்கள் அனைத்துமே ஜாப்ஸின் தனி திறனை அல்லது மேதை தன்மையை கண்டு வியந்தன அல்லது பயந்தன என்று கூறலாம்.

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற தொழில் வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் மேதைகள் ஜாப்ஸ் உடன் இணைந்து பணியாற்றியது ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணம். சாதாரண ரிசப்சன் வேலைக்கு கூட பி.ஹெச்.டி. படித்தவர்களை ஜாப்ஸ் நியமனம் செய்தார் என்பது ஆச்சரியம் கலந்த ஒரு உண்மை. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சிறந்த CEO தேவை பட்ட காலகட்டம் அது. பெப்சி கோலா நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பர் ஜானை அந்த வேலைக்கு வர பணித்தார் ஜாப்ஸ். பெரிய நிறுவனத்தின் சிறந்த பணியினை விட்டு விடுவதற்கு தயங்கினார் நண்பர் ஜான். ஜானிடம், ஜாப்ஸ் பேசிய அந்த வார்த்தைகள் ஜானை மட்டுமல்ல, பெரும் பணம் பண்ணும் பல பிரபல நிறுவனங்களின் தலை சிறந்த CEO களை அதிர வைத்தது. ஜாப்ஸ் தனது நண்பர் ஜானிடம் கேட்ட அந்த கேள்வி மிகவும் அலாதியானது. சிந்திக்க வைப்பதும் கூட. ஜாப்ஸ் கேட்டார்-

"ஜான் அவர்களே இன்னும் எத்தனை காலம் தான் சீனி கலந்த தண்ணீரை கலந்து விற்பனை செய்து கொண்டு இருப்பீர்கள்! என்னுடன் இணைந்து இந்த உலகை மாற்றும் முயற்சிக்கு உங்களை அழைக்கிறேன்" ஜாப்ஸின் தத்துவ பூர்வமான, இயற்கையான, யதார்த்தமான, ஆக்கபூர்வமான இந்த சிந்தனை ஜானின் அன்றைய தூக்கத்தை கலைத்தது. காலையில் படுக்கையை விட்டு எழுந்த அவர் ஒரு ஆக்க பூர்வமான முடிவை மேற்கொண்டார். பெப்சி கோலா கம்பெனியின் பதவியை துறந்த அவர் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

வாழ்கையில் துன்பங்களையே அனுபவித்து மகிழ்ந்தவர் ஜாப்ஸ். நீண்ட காலம் தன்னை பெற்று கைவிட்ட பெற்றோரை தேடி அலைந்தார். முடிவில் தன்னை பெற்ற தாய் உயிரோடு இருப்பதை கண்டறிந்தார். திருமணம் ஆகாமல் தன்னை பெற்று எடுத்த தாய் தந்தையர் பின்னாளில் முறைப்படி திருமணம் செய்து கொண்டதையும், தனக்கு ஒரு சகோதரி உண்டு என்பதையும் தாயிடம் இருந்து தெரிந்து கொண்டார். தனது காதலி மூலம் பிறந்த பெண் குழந்தையை கூட ஏற்று கொள்ள சிறிது காலம் தயங்கினார். பிறகு வேறு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டார். அவள் மூலம் மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். என்றாலும் அவரது குடும்ப வாழ்க்கை அவ்வளவு மகிழ்சிகரமாக இல்லை.

உடல் நிலையும் அவருக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. கேன்சர் நோயால் அவர் அவதி பட்டார். அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். லிவர் மாற்று ஆபரேஷன் கூட செய்து கொண்டார். என்றாலும் நீண்டநாள் தன்னால் வாழ இயலாது என்பதை தீர்கமாக உணர்ந்து கொண்டார். தனது முடிவை எதிர்பார்த்து காத்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கம்ப்யூட்டர் உலகின் 'தீர்க்க தரிசி' நேற்று நம்மை விட்டு மறைந்து விட்டார். தாமஸ் ஆல்வா எடிசனை போல்,ஆல்பர்ட் யொன்ஸ்டைன் போல் அறிவியல் உலகின் ஒரு மேதை உலகை விட்டு பிரிந்துவிட்டார். ஜாப்ஸ் போல் ஒருவர் தோன்ற மீண்டும் பல காலம் ஆகலாம்.அவர் விட்டு சென்ற ஆப்பிள் நிறுவனம் அவரில்லாமல் மீண்டும் புதுமைகள் படைக்குமா என்பதே இப்போதைய தொழில் வல்லுனர்களின் ஒரே கேள்வி. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஜாப்ஸ் தயாரித்த பல உபகரணங்களை பயன்படுத்தியவன் என்ற முறையில் அவரின் ரசிகராக இருந்து அவரின் செயல்பாட்டை வியக்கிறேன். என் வாழ்வில் நான் வியக்கும் ஒரு அதிசய மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் அது மிகைஅல்ல.

No comments:

Post a Comment